நினைவுகளிலிருந்து – 3 பட்ரோடு பலராமன்

        

          அக்டோபர் 1961 முதல் ஆகஸ்ட் 1964 வரை , சென்னையில் , தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சர்வேயராக பணியிலிருந்தேன்.எனக்கு அசோக் நகர் பகுதியில்வேலை. அப்போதுதான்அசோக்நகர்   . உருவாகிக்கொண்டிருந்தது .அசோக் பில்லர் நிறுவப்பட்டு,சாலைகள் , குடிநீர் , வடிகால்வசதிகள் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.  வீட்டுமனைகள் , வர்த்தக     நிறுவனங்களுக்கான மனைகள் ஏற்படுத்தப் பட்டன.HIG , MIG , LIG என்ற அளவில் தனித்தனி வீடுகளுக்கான மனைகள் உருவாகின.அப்போது அடுக்குமாடி ( APARTMENT ) கலாசாரம் இல்லை.அசோக் நகருக்கு பிறகு,அருகிலும்விரிவு படுத்தப்பட்டு கே.கே.நகர் உருவானது..

         சர்வேயர் பணிக்குஉதவியாக , எனக்கு பலராமன் என்கிற  ( Chainman ] உதவியாளர்     இருந்தார் . பரங்கிமலை பகுதியில் , பட் ரோடில் அவர் வீடு.பணியில் மிகவும் உதவியாக இருந்தார் . வேலையில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் அவனுக்கு அடிக்கடி புகை ( பீடி ) பிடிக்கும் பழக்கம் உண்டு.அவன் பேசும் சென்னை தமிழில் மரியாதையை எதிர்பார்க்க முடியாது.நீ வா சார் -- நீ சொல்லு சார்   என்றுதான் பேசுவான் . அசோக் நகரில் அப்போது கட்டுமானப் பணிகளை செய்ய , இளம் பொறியாளர்கள் ---- மதுரையை சேர்ந்த முத்துமாறன் , இளங்கோ மற்றும் திருச்சியை சேர்ந்த சந்திரசேகரன் இருந்தார்கள் . எனது உதவியாளர்    (CHAINMAN ) பலராமன் , இளம்பொறியாளர் சொல்லும் வேலைகள் எதுவும் செய்யவேண்டாம்.

           ஒருநாள்,  சந்திரசேகரன், அவருடையகட்டுமானப் பணியில் மட்ட அளவை( LEVEL  ) நான் சரி பார்த்து தர    வேண்டி யிருந்தது.    அதற்குரிய வரைபடத்தை என்னிடம் கொடுப்பதற்காக , அவர் இருந்த இடத்திலிருந்தே பலராமனை,  ஏய் இங்கே வா என்று அழைத்தார். உடனே பலராமன் சத்தமாகமாடு மேய்ப்பவரெல்லாம் JE  யாக வந்து விட்டாங்கஎன்றான் . சந்திரசேகரன் அதிர்ச்சியடைந்து,  எதுவும் பேசாமல் , நேரில் வந்து என்னிடம் வரைபடத்தை கொடுத்துவிட்டார். நான் பலராமனை அழைத்து என்னசொன்னாய் என்று கேட்டேன்.  அவன்என்னை ஏய் என்று ஏன் சார் கூப்பிட்டார் . நீ எப்பவாவது என்னை அப்படி கூப்பிட்டிருக்கியா சார் என்றான் . நான் அவனிடம் JE அப்படி அழைத்ததில் தவறில்லை.எங்கள் ஊரில்பேசும் பழக்கத்தால்அப்படி கூப்பிட்டார். மரியாதையில்லாமல்நீ பதில் பேசியது தவறு.நீ இங்கு பேசுவதுபோல,  எங்கள் ஊர் பக்கம் வந்து நீ ,  வா , போ --- “என்றுபேசினால்அடித்து விடுவார்கள். அங்கெல்லாம்    நீங்கள்வாருங்கள் என்ற முறையில் மரியாதையாக பேச வேண்டும் .அது தெரியாமல் இனிமேல்யாரிடமும் மரியாதை குறைவாக பேசாதே என்றேன்.

            ஒரு தடவை , அலுவலகத்தில் இட மாறுதல்கள் செய்யும்போது , பலராமனை வஜ்ரவேலு என்கிற சர்வேயருக்கு உதவியாளராக மாற்றி விட்டு , எனக்கு வேறு ஒரு உதவியாளரை நியமித்து உத்தரவு வந்ததது . அவனுக்கு அந்த மாறுதலில் போக விருப்பமில்லை . சர்வேயர் வஜ்ரவேலு கொஞ்சம் கோபக்காரர்.அடிக்கடி உதவியாளரை சத்தம் போடுவார்.  தவிர,  அவருக்கு   வியாசர்பாடி விரிவாக்கப்பகுதியில் சர்வே பணி. பலராமனுக்கு அவன்    வீட்டிலிருந்து வியாசர்பாடிசென்று வருவது சிரமம் . அதனால் அவன் என்னிடம் பலராமனை என்னிடமிருந்து மாற்ற வேண்டாமென்று ஆபீஸில் நீ சொல்லு சார் என்றான் . “ நான்சொல்வதால் , ஆபீஸில் கேட்க மாட்டார்கள்.  தவிர, உனக்கு பதிலாக வருபவரால் எனக்கு ஒரு விதத்தில் சௌகரியம்தான் .” என்றேன்.ஏன் சார் என்றான் . “ நீ பீடி புகை பிடித்துவிட்டு என் அருகில் வந்து  பேசும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. உனக்கு பதிலாக வருபவருக்கு அந்த பழக்கம் இல்லை. உன் பீடி பழக்கத்தை பற்றி இதுவரை எதுவும்சொல்லாமல்,பொறுத்துக் கொண்டேன். “ என்றேன்.அவன் மிகவும்வருத்தப்பட்டு, “அந்த பழக்கத்தை விட்டு விடுகிறேன் சார் , நான் உன்னோடேயே இருக்கேன் சார்என்றான்.

                நீயே  ஆபீஸில் சொல்லி உத்தரவை மாற்றி வாங்கி வா என்று சொல்லி அனுப்பிவிட்டேன் . எப்படியோ ஆபீஸில் கேட்டு , மறுநாளே உத்தரவை மாற்றி வாங்கி விட்டான் . என்னிடமே உதவியாளராக தொடர்ந்தான். பீடி பழக்கத்தைவிட்டுவிடுவதாக என்னிடம்சொன்னதை தொடர்ந்து,  சில நாட்கள் மிகவும் சிரமப்பட்டான். பாக்கு , சூடமிட்டாய் எல்லாம்போட்டுக்கொண்டு சமாளித்து , ஒரு வழியாக பீடி பழக்கத்தை விட்டுவிட்டான் .

            அவனுடைய அண்ணன்,   சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் பராமரிப்பு பகுதியில் டெக்னீஷியனாக இருந்தார்.  ஒருநாள்,  பலராமனிடம் விமானத்தை பார்க்கமுடியுமா என்றேன்.அண்ணனிடம் சொல்லி,  அவர் பணியில் இருக்கும் போதுஅழைத்து செல்வதாக கூறினான் . அடுத்த ஒரு வாரத்தில்,  விடுமுறை நாளில் அண்ணன் அழைத்து வர சொன்னதாக கூறினான். .மறுநாள் காலை 11 மணி அளவில் விமான நிலைய வாசலில் தான் காத்திருப்பதாகவும்,என்னை அங்கு வரவேண்டும் என்றான்.    என்னுடன் ஒரு உறவினர் வருவார்களே என்றேன் . கூட்டிட்டு வா சார் என்றான்.             

          மறுநாள்காலை குறிப்பிட்டநேரத்தில் நானும் பட்டு சித்தியும் விமான  நிலையம் சென்றோம்.  பலராமன் அங்கு காத்திருந்தான்.விமானநிலையம் இப்போது போல அவ்வளவு பெரியதாக இல்லை. நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையத்திற்குள் சென்று விடலாம்.பரபரப்பான சூழ்நிலையில்லாமல் நிலையம் அமைதியாக இருந்தது. கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. நிலையத்தின் கட்டட பகுதியைக்கடந்து , தென்புற கடைசியில் இருந்த நுழைவாயில்வழியாக ரன்வே பகுதிக்குசென்றோம்.அப்போதுஒரு காவலர்  ( SECURITY) , எங்கே போகிறீங்க என்று பலராமனை கேட்டார்.  அண்ணன் வரச்சொன்னார்,  பார்க்கபோகிறோம்என்றான்.  சரி , திரும்பபோகும் போதுசொல்லி விட்டுபோங்கஎன்றார் காவலர்.  ரன்வே பகுதியைக்கடந்து சிறிது தூரத்தில், அரை வட்ட வடிவிலான கூரை அமைப்புடன் ஒரு HANGER  [விமானங்களை நிறுத்தி பராமரிப்பு பணிகள் பார்க்கும் இடம்)  இருந்தது.

        நாங்கள் அங்கு சென்றவுடன்,  பலராமனின் அண்ணன் எங்களை அன்புடன் வரவேற்றார்.    அப்போது அங்கே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. என்னையும் பட்டு சித்தியையும் விமானத்தினுள் ஏற்றி அழைத்துச்  சென்றார்.   பலராமன் கீழேயே நின்று விட்டான். அண்ணன் எங்களுக்கு  பைலட்டுகள் அமர்ந்து விமானத்தை இயக்கும் பகுதி உட்பட எல்லாவற்றையும்காட்டி விபரங்கள் கூறினார். விமானத்திலிருந்து இறங்கும் முன் , அண்ணன் என்னிடம்    ரொம்பநன்றி சார் என்றார்  .விமானம் பார்க்க உதவி செய்ததற்கு, நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றேன்.  அதற்கில்லை சார் , எங்கள் வீட்டில் எல்லாரும் பலராமனை பீடி பழக்கத்தை விட்டு விடும்படி எவ்வளவோ சொன்னோம்.     அவன். கேட்கவில்லை . எப்படியோ நீங்கள் சொல்லி அவன் பழக்கத்தை மாற்றி விட்டீர்கள். மிக்கமகிழ்ச்சி.     உங்களை சந்திப்பதற்காகவே , பலராமன் சொன்னவுடன் உங்களை அழைத்து வரச்சொன்னேன்  என்றார்.. விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் முன்  பலராமன் காவலரிடம் சொல்லி விட்டு வந்தான்.  நாங்கள் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தோம்.விமானத்தை பார்த்து வந்ததில் பட்டு சித்திக்கு ரொம்ப  மகிழ்ச்சி.

             அசோக்  நகரில் பணியில் இருக்கும் போது ,     ( தற்போதய )  சாஸ்திரி நகர் பகுதியில் ,சில நாட்களுக்கு  மட்டும்   ஆரம்பகட்ட சர்வே பணிகளுக்காக செல்ல வேண்டியதாயிற்று.   அப்போது அந்த பகுதி ஒரு வசதியும் இல்லாமல்,  பெசன்ட்நகர் கடற்கரை போல மணற்பாங்கான இடமாக இருந்தது. அதில் சாதாரணமாக நடப்பதே சிரமமாக இருந்தது. அப்போது,  சர்வே உபகரணங்களுடன் பலராமன் உடன் வந்து வேலையில் மிகவும் உதவியாக இருந்தான்.

              வீட்டு வசதி வாரியத்திலிருந்து விலகி ,சேப்பாக்கம் பொதுப்பணித்துறையில் பணியில் சேர்ந்த பிறகு பலராமனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  அவன் எனது நினைவில் நிற்பவன் .

 

                                                  ----------------------------------------------

 

 

 

 

Comments